புதன், 17 ஜூன், 2009

மல்லாட்ட...

மணிலாக்கொல்லை
முன்னிரவுக் காவல்கள்
மிகவும் சுவாரஸ்யமானவை

அங்கொன்றும் இங்கொன்றுமாக
அண்டைக் கொல்லைகளிலும் சேர்த்து
கைக்கொண்ட வரை
சுட்டுத்தின்போம் செடிபிங்கி

முதலியார் கடை
வெல்லம் உபயம்
வீட்டு மளிகைக்கணக்கு

ஆசைப்பட்டு வாங்கினால்
இரண்டு ரூபாய்க்கு
பத்தே பத்து வறுகடலைகளை
கூம்புப் பொட்டலமாய் நீட்டுகிறான்
நகரத்தெருவின் தள்ளுவண்டிக்காரன்...
******
* மல்லாட்ட... மணிலாக்கொட்டையின் பேச்சு வழக்கு. புதுச்சேரி & தென்னாற்காடு மாவட்டங்களாகிய எங்கள் பகுதிகளில் வேர்க்கடலை - மணிலாக்கொட்டை என்றுதான் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கடலை ரகம் இப்பகுதிகளில் பயிரிடப்படுவதால் இந்தப்பெயர்.

திங்கள், 15 ஜூன், 2009

வாசம்


குளித்த பிறகுதான்
ஒவ்வொரு முறையும்
அனுமதிக்கிறாய்;
ஆனாலும்,
இறுதி ஆசுவாசத்திற்கு
வியர்வை வாசம் மார்பில்
முகம் புதைக்க தேடுகிறேன்...
******

சனி, 13 ஜூன், 2009

வலி

எந்த ஒன்றிலும்
ஏதேனும் ஒன்றை
வேண்டியோ விரும்பாமலோ
உதாசினப்படுத்துவது
நடந்தேறிவிடுகிறது...

அன்புக்குத்தான் வலி...

மறுபடியும்
மறுதாம்பு போல
வளர்த்தெடுக்க முடிவதில்லை
அன்பை...!
******

வெள்ளி, 12 ஜூன், 2009

சிற்பங்கள்

மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

சிவதாண்டவத்தின் போதும்
புரண்டு படுக்காத உறக்கத்தை
சூரியனாய் துயிலெழுப்பிய விரல்களை...

வைராக்கியங்களாய் இறுகிக் கிடந்த போதும்
வைரம் பட்ட கண்ணாடியாய்
இளகியதால் பெற்ற பேறு...

அறுத்துக் கொண்டிருந்தாலும் இழந்ததை
பொறுத்துக் கொண்டிருக்கும் கரைகளால்
நதியென்ற பெருமை...

முன்னவன் அடைந்த ஞானப்பழத்தை
விட்டுக்கொடுத்ததால்
இளையவன் பெற்ற வெற்றிச் சிகரம்...

கரடுமுரடுகளையும் காண
கண்கோடி கேட்கும் நிலவின்
வசீகர அழகு வசிக்கிற பார்வை...

கண்திறக்கவே வழியில்லாத
கர்ப்பப் பூமியில்
கலையாகி நிற்கும் சரித்திரம்...

இப்படி
மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

தன்னை நினைத்து
மனிதர்களைப் பார்த்து
நெட்டி முறித்து நிமிர்ந்து நின்றது
ஒரு சிற்பம்!
******

வியாழன், 11 ஜூன், 2009

மெழுகுபொம்மை


உனக்குள்ளே சலனமில்லை
உன்னைச்சொல்லிக் குற்றமில்லை
உன்மேனி மெழுகியவன்
உண்மையிலே ஞானியவன்

கம்பன் கவியழகும்
ரவிவர்மன் கலையழகும்
இங்கு உயிர்த்தனவோ
இதயத்தை ஈர்க்கிறதே

செங்காந்தள் மென்விரலும்
செல்வியரின் கொடியிடையும்
எல்லாமாய் உனக்கிருக்கும்
எழுதிவைத்த விழியழகும்

ஆடையில்லை என்றாலும்
அழகென்றே சொல்கிறது
ஆசைகளைத் தூண்டிவிட்டு
மோகத்தால் கொல்கிறது

அலைகடலாய் இருந்தாலும்
அமைதியாக நடிக்கின்றாய்
ஆணவத்தின் சுவடுகளை
அடிக்காலால் மிதிக்கின்றாய்

சிகரத்து உச்சிகளின்
சிற்றரசன் எனைநீதான்
சிதறடித்தாய் பள்ளங்களில்
சிரிக்காதே சொல்லிவைத்தேன்

ஆயிரமாய் கனவுகளை
அடிமனதில் எழுப்பிவிட்டு
மௌனப்போர் நடத்துகிறாய்
மன்னிக்க மாட்டேன் நான்

நிலையில்லா உன்னழகு
நிஜம் பலவே சொன்னாலும்
உருவமில்லா வெப்பத்தால்
உருகிவிடும் நினைவில்கொள்!
******

புதன், 10 ஜூன், 2009

கூலி ஏர்

நடவுக்காலங்களில்
ஏர்களுக்கு ஏக கிராக்கி

டிராக்டர்களால்
ஏர் உழவு அருகினாலும்
அதில்தான் சேறு நிறையும்...

அந்தியில் வீடேகி
அப்பாவை ஏர்கேட்டு
பெரும்புள்ளிகள்(?)
முகதாட்சண்யம் பார்க்கும்

எத்தனை கிராக்கியிலும்
ஆளுக்கு ஒருநாளாவது ஏரோட்டுவார்

ஆனால், முப்பது ரூபாய் கூலிதர
நிலக்கிழார் நீலமேகரெட்டி
மூன்று தவணைகளாவது ஆகும்...

ஒவ்வொரு முறையும்
அடுத்த போகத்தில் அவருக்கு
ஏரோட்டுவதில்லை என்கிறார்;
கூலி ஏரோட்டியால்
அப்படி முடிவெக்க
எந்த -அடுத்தபோகத்தில்- முடிகிறது...?
******
(சுப.வீரபாண்டியனின் 'நந்தன்' ஏப்ரல் 16-30, 1999 இதழில் வெளிவந்தது)

செவ்வாய், 9 ஜூன், 2009

அழைப்பு


உன் ஒற்றை
அழைப்பிற்காக
காத்துக்கிடப்பவை
என் காதுகள் மட்டுமல்ல;
உயிரையே கிள்ளுகிற
ஒரு சொல்லால்
எப்போது அழைப்பாய்
சொல்...
******

திங்கள், 1 ஜூன், 2009

என்றென்றும்...


மறந்து விடச்சொல்லி
கடைசி கடிதம் வந்தது;
என்றென்றும் அன்புடன்...!
******