வெள்ளி, 10 ஜூலை, 2009

முக்கண்ணன்!

மனசுக்குள் மந்திரம்
பொங்கல் நெய்வேத்தியம்
சுகப்படும்போது பூஜை –
காலங்காலமாய்
கல்யாணசுந்தர குருக்கள்
பக்தர்களுக்கும்,
ஆறுகால பூஜைக்கும்...

வழக்கத்தில்
வழக்கற்று விழுந்தது
சொக்கப்பனைத் தீ;
மூச்சுத்திணறலை
இறுகப்பற்றிற்று இளையதலைமுறை...

வாய்நிறைய
வடமொழி ஸ்லோகம்
வாச வெண்மிளகுப் பொங்கல்
பக்கத்தூர் புதிய படிக்கூலி...
சிரிக்கும் சிரிப்பில்
சுவாமிநாதரே சுவாமியென
ஊர் பேசிற்று...

கூலிப்படியோ கூட்டுப்பொரியல்...

பிரதோஷ பூஜை
தக்ஷிணாமூர்த்தி பூஜை
ராகுகால துர்க்கா பூஜை
சிவன்கோயில் சிலைகளும்
பக்தர்களோடு உற்சவமூர்த்திகள்!

எல்லா அமோகத்திலும்
காலச்சக்கரம்
மூத்த தலைமுறைக்கு...

இரவோடு சிக்கறுப்பு
சுவாமிநாதருக்கு;
கையில் மணியோடு
கல்யாணசுந்தரம்
பிற்பாடு பிரகார வலம்...

பதவி, வியபாரம், பக்தி –
பார்த்துக்கொண்டேயிருக்கிறான்
முக்கண்ணன்!
******

சனி, 4 ஜூலை, 2009

மூன்று கவிதைகள்


வீட்டுக்கு வீடு
மனிதர்கள் வாழ்கிறோம்;
பாதுகாப்பிற்கு வளர்க்கிறோம்
நாய்கள்...!
******

முதலாளிகள் மட்டுமன்றி
வேடிக்கை பார்ப்பவனுக்கும்
பிடித்திருக்கிறது
வேலை செய்பவனை...
******

சாலையைக் கடக்க
காத்திருந்தவர்களுக்காக
முதல் ஆளாய் நிறுத்தினேன்
வண்டியை –
என்னில் திறந்தது வழி!
******