புதன், 30 அக்டோபர், 2013

ஒளி

சுடரின் ஒளிவட்டம்
இருள் வட்டம் கடந்த
ஞானவட்டத்தில் ஒளிந்திருக்கிறது
தீபத்தின் பிரகாசம்
******
உன் விரல்கள் ஏற்றிய
தீபக்கண்ணிகளில்
நான் இப்போது நெய்
******
ஆயிரம் தீபங்களின்
ஏகாந்த ஒளிப்பொழிவு
சற்றே தலைசாய்த்த
உன் மந்தகாச புன்னகை
******
பத்து விரல் திரி
பற்றி எரியும் நகச்சுடர்
நடமாடும் தசமுக விளக்கு நீ
******
உன் முகத்தை என் கைகளில்
ஏந்தியபொழுது
ஒரு தீபமாகியிருந்தது அது
******
ஆண்டுதோறும் தலைதீபாவளி
தினமும் உன்னால்
இன்று புதிதாய் பிறந்தேன்
******
*நன்றி: சூரியகதிர் நவம்பர் - 2013 இதழ்

திங்கள், 22 ஜூலை, 2013

கூசும் சூரியன்



எங்கள் வீட்டு 
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்
வானவில் வரைந்தவை

பிஞ்சு மழலை பிதற்ற
தேனெடுக்கப் போன முதல்நாளில் 
தேம்பியழுதபடி திரும்பி வந்தது 

குழலும் யாழும்
வெம்பி வெடிக்க 
வாசலிலேயே முறைப்பாடு 

வண்ணத்துப்பூச்சியின்
விரியத்துடித்த சிறகுகளில் 
வன்பிரம்பின் விளையாட்டு 

அது உருவாக்கியிருந்தது 
ஒருதுளி கருஞ்சிவப்பு சூரியன்!
******